சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     
Thirumurai
1.094   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   நீலமாமிடற்று ஆலவாயிலான் பால் அது ஆயினார்
பண் - குறிஞ்சி   (திருஆலவாய் (மதுரை) சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=vCNP3lGfb-E
2.066   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   மந்திரம் ஆவது நீறு; வானவர்
பண் - காந்தாரம்   (திருஆலவாய் (மதுரை) சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=n2Uf5Es4A10
Audio: https://sivaya.org/audio/2.066 மந்திரம் ஆவது நீறு.mp3
2.070   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   பிரமன் ஊர், வேணுபுரம், புகலி,
பண் - காந்தாரம்   (திருஆலவாய் (மதுரை) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
Audio: https://www.youtube.com/watch?v=kLkjpCfoHzA
3.032   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   வன்னியும் மத்தமும் மதி பொதி
பண் - கொல்லி   (திருஆலவாய் (மதுரை) )
Audio: https://www.youtube.com/watch?v=ksUhEVxZ_eo
3.039   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   மானின் நேர் விழி மாதராய்!
பண் - கொல்லி   (திருஆலவாய் (மதுரை) சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=s8s-PijeeAY
3.047   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   காட்டு மா அது உரித்து,
பண் - கௌசிகம்   (திருஆலவாய் (மதுரை) சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=VoxehYAATnU
3.051   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   செய்யனே! திரு ஆலவாய் மேவிய ஐயனே!
பண் - கௌசிகம்   (திருஆலவாய் (மதுரை) சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=FKdAEZH4Pms
Audio: https://sivaya.org/audio/3.051 Seyyanae ThiruAalavaay.mp3
3.052   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   வீடு அலால் அவாய் இலாஅய்,
பண் - கௌசிகம்   (திருஆலவாய் (மதுரை) சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=bAtyDGetrng
3.054   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   வாழ்க அந்தணர், வானவர், ஆன்
பண் - கௌசிகம்   (திருஆலவாய் (மதுரை) )
Audio: https://www.youtube.com/watch?v=ArwIB72oZ48
3.087   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   தளிர் இள வளர் ஒளி
பண் - சாதாரி   (திருஆலவாய் (மதுரை) தெர்ப்பாரணியர் போகமார்த்தபூண்முலையம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=KvNAaFJNW_w
3.108   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   வேத வேள்வியை நிந்தனை செய்து
பண் - பழம்பஞ்சுரம்   (திருஆலவாய் (மதுரை) சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=JEAsR66LDzw
3.115   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   ஆல நீழல் உகந்தது இருக்கையே;
பண் - பழம்பஞ்சுரம்   (திருஆலவாய் (மதுரை) சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=LgBOlCK1tXU
3.120   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   மங்கையர்க்கு அரசி வளவர்கோன் பாவை,
பண் - புறநீர்மை   (திருஆலவாய் (மதுரை) சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=z2C_j--RpY8
Audio: https://sivaya.org/audio/3.120 Mangayarkarasi.mp3
Audio: https://sivaya.org/audio/3.120 mangayarkarasi.mp3
4.062   திருநாவுக்கரசர்   தேவாரம்   வேதியா! வேதகீதா! விண்ணவர் அண்ணா!
பண் - கொல்லி   (திருஆலவாய் (மதுரை) சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=9Ua09EHDdBc
6.019   திருநாவுக்கரசர்   தேவாரம்   முளைத்தானை, எல்லார்க்கும் முன்னே தோன்றி;
பண் - திருத்தாண்டகம்   (திருஆலவாய் (மதுரை) சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=XBV0vMkPOq4

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1.094   நீலமாமிடற்று ஆலவாயிலான் பால் அது ஆயினார்  
பண் - குறிஞ்சி   (திருத்தலம் திருஆலவாய் (மதுரை) ; (திருத்தலம் அருள்தரு மீனாட்சியம்மை உடனுறை அருள்மிகு சொக்கநாதசுவாமி திருவடிகள் போற்றி )
திருஞானசம்பந்தர் திருமறைக் காட்டிலிருந்து அடியவர் புடைசூழச் சிவிகையில் ஏறிப் புறப்பட்டு அகத்தியான்பள்ளி, கோடிக் குழகர் முதலிய தலங்களை வணங்கிக் கொண்டு தென் மேற்றிசை நோக்கிச் சென்று திருக் கொடுங்குன்றம் பணிந்து மதுரையின் எல்லையை அடைந்தார், மங்கையர்க்கரசியார் ஞானசம்பந்தர் வருகையை அறிந்து ஊர் எல்லையில் வரவேற்குமாறு குலச்சிறை யாரை அனுப்பியிருந்தார். மதுரை எல்லையை அடைந்த ஞானசம்பந் தரைக் குலச்சிறையார் வணங்கி வரவேற்றார். பிள்ளையார் சிவிகை யிலிருந்து இறங்கி அரசியார்க்கும் அமைச்சர்க்கும் திருவருளால் நன்மைகள் விளைக என வாழ்த்தினார். குலச்சிறையார் இன்று தாங்கள் எழுந்தருளப் பெற்ற பேற்றினால் என்றைக்கும் திருவருள் உடையோம். இனி எங்கள் நாட்டில் திருநீற்றொளி விளங்குவது உறுதி என முகமனுரை கூறி, மங்கையர்க்கரசியார் ஞானசம்பந்தரை வரவேற்கத் தன்னை அனுப்பியுள்ளதைத் தெரிவித்தார். மேலும் மதுரை மிக அண்மையிலுள்ளது என்றும் கூறினார். ஞானசம்பந்தர் மதுரையை நெருங்கிய நிலையில் மதுரை இன்னும் எவ்வளவு தூரம் உள்ளது எனக் கேட்க அடியவர்கள் கோபுரத்துடன் திருக்கோயிலைச் சுட்டிக்காட்டி அதுவே திருவால வாய் எனக் கூறக்கேட்டு மங்கையர்க்கரசியார் குலச்சிறையார் ஆகியோரின் பக்தி நலத்தைப் புகழ்ந்து திருப்பதிகம் அருளிச் செய்து கொண்டே ஆலவாய்த் திருக்கோயிலை அடைந்து குலச்சிறை யாருடன் வலங்கொண்டு பணிந்து நீலமாமிடற்று எனத் தொடங்கும் திருப்பதிகம் பாடிப் போற்றினார்.
இந்த பதிகத்தை பாடினாலோ அல்லது கேட்டாலோ மதுரையை தரிசித்த பலன் கிடைக்கும்
நீலமாமிடற்று ஆலவாயிலான்
பால் அது ஆயினார் ஞாலம் ஆள்வரே.

[1]
ஞாலம் ஏழும் ஆம் ஆலவாயிலார்
சீலமே சொலீர், காலன் வீடவே!

[2]
ஆலநீழலார், ஆலவாயிலார்,
காலகாலனார் பால் அது ஆமினே!

[3]
அந்தம் இல் புகழ் எந்தை ஆலவாய்
பந்தி ஆர் கழல் சிந்தை செய்ம்மினே!

[4]
ஆடல் ஏற்றினான் கூடல் ஆலவாய்
பாடியே, மனம் நாடி, வாழ்மினே!

[5]
அண்ணல் ஆலவாய் நண்ணினான் தனை
எண்ணியே தொழ, திண்ணம் இன்பமே.

[6]
அம் பொன்-ஆலவாய் நம்பனார் கழல்
நம்பி வாழ்பவர் துன்பம் வீடுமே.

[7]
அரக்கனார் வலி நெருக்கன் ஆலவாய்
உரைக்கும் உள்ளத்தார்க்கு, இரக்கம் உண்மையே.

[8]
அருவன், ஆலவாய் மருவினான்தனை
இருவர் ஏத்த, நின்று உருவம் ஓங்குமே.

[9]
ஆரம் நாகம் ஆம் சீரன், ஆலவாய்த்
தேர் அமண் செற்ற வீரன் என்பரே.

[10]
அடிகள் ஆலவாய், படி கொள் சம்பந்தன்,
முடிவு இல் இன்தமிழ் செடிகள் நீக்குமே.
[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2.066   மந்திரம் ஆவது நீறு; வானவர்  
பண் - காந்தாரம்   (திருத்தலம் திருஆலவாய் (மதுரை) ; (திருத்தலம் அருள்தரு மீனாட்சியம்மை உடனுறை அருள்மிகு சொக்கநாதசுவாமி திருவடிகள் போற்றி )
சமணர்கள் அச்சமுற்றார்கள். ஆயினும் அதனை மறைத்துக் கொண்டு சம்பந்தரை நோக்கி உங்கள் சமயக் கொள்கைகளைக் கூறுங்கள் எனக்கூறினர். அரசியார் கொடிய சமணர்கள் நடுவில் இப் பாலகரை நாம் அழைத்தது தவறோ என வருந்திச் சமணர்களை நோக்கி மன்னனின் நோயை முதலில் தணிக்க முயலுங்கள். நோய் தணிந்த பிறகு வாது செய்யலாம் என்றார். ஞானசம்பந்தர் அரசமா தேவியாரைப் பார்த்து அஞ்சற்க; என்னைப் பாலகன் எனக் கருத வேண்டா; ஆலவாயரன் துணைநிற்க வாதில் வெல்வோம் என்றார். சமணர்கள் மன்னன் உடலில் இடப்பாகம் பற்றிய நோயை நாங்கள் குணப்படுத்துகிறோம் என்று பீலி கொண்டு உடலைத் தடவிய அளவில் நோய் மேலும் கூடியது. ஞானசம்பந்தர் மந்திரமாவது நீறு என்ற திருப்பதிகம் பாடி, தம் திருக்கரத்தால் வலப்பாகத்தில் திரு நீற்றைத் தடவிய அளவில் நோய் தணிந்து இடப்பாகத்தே மூண்டெழக் கண்ட மன்னன் அப் பாகத்தையும் தாங்களே தீர்த்தருள வேண்டுமென வேண்டினான். ஞானசம்பந்தர் இடப்பாகத்திலும் திருநீறு பூசிய அளவில் நோய் தணிந்தது. மன்னன் எழுந்து ஞானசம்பந்தரைப் பணிந்து யான் உய்ந்தேன் என்று போற்றினான்.
வெப்பம் மிகுதியால் ஏற்படும் நோய்கள், உடல் சூடு நீங்க ஓதவேண்டிய பதிகம்
மந்திரம் ஆவது நீறு; வானவர் மேலது நீறு;
சுந்தரம் ஆவது நீறு; துதிக்கப்படுவது நீறு;
தந்திரம் ஆவது நீறு; சமயத்தில் உள்ளது நீறு;
செந்துவர்வாய் உமை பங்கன் திரு ஆலவாயான் திருநீறே.

[1]
வேதத்தில் உள்ளது நீறு; வெந்துயர் தீர்ப்பது நீறு;
போதம் தருவது நீறு; புன்மை தவிர்ப்பது நீறு;
ஓதத் தகுவது நீறு; உண்மையில் உள்ளது நீறு;
சீதப்புனல் வயல் சூழ்ந்த திரு ஆலவாயான் திருநீறே.

[2]
முத்தி தருவது நீறு; முனிவர் அணிவது நீறு;
சத்தியம் ஆவது நீறு; தக்கோர் புகழ்வது நீறு;
பத்தி தருவது நீறு; பரவ இனியது நீறு;
சித்தி தருவது நீறு; திரு ஆலவாயான் திருநீறே.

[3]
காண இனியது நீறு; கவினைத் தருவது நீறு;
பேணி அணிபவர்க்கு எல்லாம் பெருமை கொடுப்பது நீறு;
மாணம் தகைவது நீறு; மதியைத் தருவது நீறு;
சேணம் தருவது நீறு; திரு ஆலவாயான் திருநீறே.

[4]
பூச இனியது நீறு; புண்ணியம் ஆவது நீறு;
பேச இனியது நீறு; பெருந் தவத்தோர்களுக்கு எல்லாம்
ஆசை கெடுப்பது நீறு; அந்தம் அது ஆவது நீறு;
தேசம் புகழ்வது நீறு; திரு ஆலவாயான் திருநீறே.

[5]
அருத்தம் அது ஆவது நீறு; அவலம் அறுப்பது நீறு;
வருத்தம் தணிப்பது நீறு; வானம் அளிப்பது நீறு;
பொருத்தம் அது ஆவது நீறு; புண்ணியர் பூசும் வெண் நீறு;
திருத் தகு மாளிகை சூழ்ந்த திரு ஆலவாயான் திருநீறே.

[6]
எயில் அது அட்டது நீறு; இருமைக்கும் உள்ளது நீறு;
பயிலப்படுவது நீறு; பாக்கியம் ஆவது நீறு;
துயிலைத் தடுப்பது நீறு; சுத்தம் அது ஆவது நீறு;
அயிலைப் பொலிதரு சூலத்து ஆலவாயான் திருநீறே.

[7]
இராவணன் மேலது நீறு; எண்ணத் தகுவது நீறு;
பராவணம் ஆவது நீறு; பாவம் அறுப்பது நீறு;
தராவணம் ஆவது நீறு; தத்துவம் ஆவது நீறு;
அரா அணங்கும் திருமேனி ஆலவாயான் திருநீறே.

[8]
மாலொடு அயன் அறியாத வண்ணமும் உள்ளது நீறு;
மேல் உறை தேவர்கள் தங்கள் மெய்யது வெண்பொடி நீறு;
ஏல உடம்பு இடர் தீர்க்கும் இன்பம் தருவது நீறு;
ஆலம் அது உண்ட மிடற்று எம் ஆலவாயான் திருநீறே.

[9]
குண்டிகைக் கையர்களோடு சாக்கியர் கூட்டமும் கூட,
கண் திகைப்பிப்பது நீறு; கருத இனியது நீறு;
எண்திசைப்பட்ட பொருளார் ஏத்தும் தகையது நீறு;
அண்டத்தவர் பணிந்து ஏத்தும் ஆலவாயான் திருநீறே.

[10]
ஆற்றல் அடல் விடை ஏறும் ஆலவாயான் திருநீற்றைப்
போற்றி, புகலி நிலாவும் பூசுரன் ஞானசம்பந்தன்,
தேற்றி, தென்னன் உடல் உற்ற தீப்பிணி ஆயின தீரச்
சாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லவர் தாமே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2.070   பிரமன் ஊர், வேணுபுரம், புகலி,  
பண் - காந்தாரம்   (திருத்தலம் திருஆலவாய் (மதுரை) ; (திருத்தலம் அருள்தரு திருநிலைநாயகி உடனுறை அருள்மிகு பிரமபுரீசர் திருவடிகள் போற்றி )
ஞானசம்பந்தர் பாண்டியன் அரண்மனையை அடைந்து மன்னன் அருகில் இடப்பெற்ற பொற்றவிசில் எழுந்தருளினார். மன்னன் ஞானசம்பந்தரைத் தரிசித்த அளவில் நோய் சிறிது தணியப் பெற்றவனாய் அவரோடு உரையாடும் முறையில் நுமது ஊர் எது எனக் கேட்கப் பிரமனூர் என்ற திருப்பதிகத்தால் விடையளித்தார்.
பிரமன் ஊர், வேணுபுரம், புகலி, வெங்குரு, பெருநீர்த்
தோணி
புரம், மன்னு பூந்தராய், பொன் அம் சிரபுரம், புறவம்,
சண்பை,
அரன் மன்னு தண் காழி, கொச்சைவயம், உள்ளிட்டு அங்கு
ஆதி ஆய
பரமன் ஊர் பன்னிரண்டு ஆய் நின்ற திருக்கழுமலம் நாம்
பரவும் ஊரே.

[1]
வேணுபுரம், பிரமன் ஊர், புகலி, பெரு வெங்குரு,
வெள்ளத்து ஓங்கும்
தோணிபுரம், பூந்தராய், தூ நீர்ச் சிரபுரம், புறவம், காழி,
கோணிய கோட்டாற்றுக் கொச்சைவயம், சண்பை, கூரும்
செல்வம்
காணிய வையகத்தார் ஏத்தும் கழுமலம் நாம் கருதும்
ஊரே.

[2]
புகலி, சிரபுரம், வேணுபுரம், சண்பை, புறவம், காழி,
நிகர் இல் பிரமபுரம், கொச்சைவயம், நீர்மேல் நின்ற
மூதூர்,
அகலிய வெங்குருவோடு, அம் தண் தராய், அமரர்
பெருமாற்கு இன்பம்
பகரும் நகர் நல்ல கழுமலம் நாம் கைதொழுது பாடும்
ஊரே.

[3]
வெங்குரு, தண்புகலி, வேணுபுரம், ச்ண்பை, வெள்ளம்
கொள்ளத்
தொங்கிய தோணிபுரம், பூந்தாய், தொகு பிரமபுரம், தொல்
காழி,
தங்கு பொழில் புறவம், கொச்சைவயம், தலி பண்டு ஆண்ட
மூதூர்,
கங்கை சடைமுடிமேல் ஏற்றான் கழுமலம் - நாம் கருதும்
ஊரே.

[4]
தொல் நீரில் தோணிபுரம், புகலி, வெங்குரு, துயர் தீர்
காழி,
இன் நீர வேணுபுரம் பூந்தராய், பிரமன் ஊர், எழில் ஆர்
சண்பை,
நன்நீர பூம் புறவம், கொச்சைவயம், சிலம்பன்நகர், ஆம்
நல்ல
பொன் நீர புன்சடையான் பூந் தண் கழுமலம் நாம் புகழும்
ஊரே.

[5]
தண் அம் தராய், புகலி, தாமரையான் ஊர், சண்பை, தலை
முன் ஆண்ட
அண்ணல் நகர், கொச்சைவயம், தண் புறவம், சீர் அணி
ஆர் காழி,
விண் இயல் சீர் வெங்குரு, நல் வேணுபுரம், தோணிபுரம்,
மேலார் ஏத்து
கண் நுதலான் மேவிய நல் கழுமலம் நாம் கைதொழுது
கருதும் ஊரே.

[6]
சீர் ஆர் சிரபுரமும், கொச்சை வயம், சண்பையொடு,
புறவம், நல்ல
ஆராத் தராய், பிரமன் ஊர், புகலி, வெங்குருவொடு, அம்
தண் காழி,
ஏர் ஆர் கழுமலமும், வேணுபுரம், தோணிபுரம், என்று
என்று உள்கி,
பேரால் நெடியவனும் நான்முகனும் காண்பு அரிய
பெருமான் ஊரே.

[7]
புறவம், சிரபுரமும், தோணிபுரம், சண்பை, மிகு புகலி, காழி,
நறவம் மிகு சோலைக் கொச்சைவயம், தராய், நான்முகன்
தன் ஊர்,
விறல் ஆய வெங்குருவும், வேணுபுரம், விசயன் மேல்
அம்பு எய்து
திறலால் அரக்கனைச் செற்றான் தன் கழுமலம் நாம்
சேரும் ஊரே.

[8]
சண்பை, பிரமபுரம், தண் புகலி, வெங்குரு, நல் காழி,
சாயாப்
பண்பு ஆர் சிரபுரமும், கொச்சைவயம், தராய், புறவம்,
பார்மேல்
நண்பு ஆர் கழுமலம், சீர் வேணுபுரம், தோணிபுரம் நாண்
இலாத
வெண்பல் சமணரொடு சாக்கியரை வியப்பு அழித்த
விமலன் ஊரே.

[9]
செழு மலிய பூங் காழி, புறவம், சிரபுரம், சீர்ப் புகலி,
செய்ய
கொழுமலரான் நன்நகரம், தோணிபுரம், கொச்சைவயம்,
சண்பை, ஆய
விழுமிய சீர் வெங்குருவொடு, ஓங்கு தராய், வேணுபுரம்,
மிகு நல் மாடக்
கழுமலம், என்று இன்ன பெயர் பன்னிரண்டும் கண்
நுதலான் கருதும் ஊரே.

[10]
கொச்சைவயம், பிரமன் ஊர், புகலி, வெங்குரு, புறவம்,
காழி,
நிச்சல் விழவு ஓவா நீடு ஆர் சிரபுரம், நீள் சண்பை மூதூர்,
நச்சு இனிய பூந்தராய், வேணுபுரம், தோணிபுரம், ஆகி
நம்மேல்
அச்சங்கள் தீர்த்து அருளும் அம்மான் கழுமலம் நாம் அமரும் ஊரே.

[11]
காவி மலர் புரையும் கண்ணார் கழுமலத்தின் பெயரை
நாளும்
பாவிய சீர்ப் பன்னிரண்டும் நன்நூலாப் பத்திமையால்
பனுவல் மாலை
நாவின் நலம் புகழ் சீர் நால்மறையான் ஞானசம்பந்தன்
சொன்ன
மேவி இசை மொழிவார் விண்ணவரில் எண்ணுதலை
விருப்பு உளாரே.

[12]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3.032   வன்னியும் மத்தமும் மதி பொதி  
பண் - கொல்லி   (திருத்தலம் திருஆலவாய் (மதுரை) ; (திருத்தலம் அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
வன்னியும் மத்தமும் மதி பொதி சடையினன்,
பொன் இயல் திருவடி புதுமலர் அவைகொடு
மன்னிய மறையவர் வழிபட, அடியவர்
இன் இசை பாடல் ஆர் ஏடகத்து ஒருவனே.

[1]
கொடி நெடுமாளிகை, கோபுரம், குளிர்மதி
வடிவு உற அமைதர, மருவிய ஏடகத்து
அடிகளை அடி பணிந்து அரற்றுமின், அன்பினால்!
இடிபடும் வினைகள் போய் இல்லை அது ஆகுமே.

[2]
குண்டலம் திகழ்தரு காது உடைக் குழகனை
வண்டு அலம்பும் மலர்க்கொன்றை, வான்மதி, அணி
செண்டு அலம்பும் விடைச் சேடன்-ஊர் ஏடகம்
கண்டு கைதொழுதலும், கவலை நோய் கழலுமே.

[3]
ஏலம் ஆர்தரு குழல் ஏழையோடு எழில் பெறும்
கோலம் ஆர்தரு விடைக் குழகனார் உறைவு இடம்
சால(ம்) மாதவிகளும், சந்தனம், சண்பகம்,
சீலம் ஆர் ஏடகம் சேர்தல் ஆம், செல்வமே.

[4]
வரி அணி நயனி நல் மலைமகள் மறுகிட,
கரியினை உரிசெய்த கறை அணி மிடறினன்;
பெரியவன்; பெண்ணினோடு ஆண் அலி ஆகிய
எரியவன்; உறைவு இடம் ஏடகக் கோயிலே.

[5]
பொய்கையின் பொழில் உறு புதுமலர்த் தென்றல் ஆர்
வைகையின் வடகரை மருவிய ஏடகத்து
ஐயனை அடி பணிந்து, அரற்றுமின்! அடர்தரும்
வெய்ய வன்பிணி கெட, வீடு எளிது ஆகுமே.

[6]
தடவரை எடுத்தவன் தருக்கு இற, தோள் அடர்
பட, விரல் ஊன்றியே, பரிந்து அவற்கு அருள் செய்தான்;
மடவரல், எருக்கொடு, வன்னியும், மத்தமும்,
இடம் உடைச் சடையினன்-ஏடகத்து இறைவனே.

[8]
பொன்னும், மா மணிகளும், பொருதிரைச் சந்து அகில்
தன்னுள் ஆர் வைகையின் கரைதனில் சமைவு உற;
அன்னம் ஆம் அயனும், மால், அடி முடி தேடியும்
இன்ன ஆறு என ஒணான்-ஏடகத்து ஒருவனே.

[9]
குண்டிகைக் கையினர், குணம் இலாத் தேரர்கள்
பண்டியைப் பெருக்கிடும் பளகர்கள் பணிகிலர்
வண்டு இரைக்கும் மலர்க்கொன்றையும் வன்னியும்
இண்டை சேர்க்கும் சடை ஏடகத்து எந்தையே.

[10]
கோடு, சந்தனம், அகில், கொண்டு இழி வைகை நீா
ஏடு சென்று அணைதரும் ஏடகத்து ஒருவனை,
நாடு தென்புகலியுள் ஞானசம்பந்தன
பாடல் பத்து இவை வலார்க்கு இல்லை ஆம், பாவமே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3.039   மானின் நேர் விழி மாதராய்!  
பண் - கொல்லி   (திருத்தலம் திருஆலவாய் (மதுரை) ; (திருத்தலம் அருள்தரு மீனாட்சியம்மை உடனுறை அருள்மிகு சொக்கநாதசுவாமி திருவடிகள் போற்றி )
மானின் நேர் விழி மாதராய்! வழுதிக்கு மா பெருந்தேவி! கேள்
பால் நல் வாய் ஒரு பாலன் ஈங்கு இவன் என்று நீ பரிவு எய்திடேல்!
ஆனைமாமலை ஆதி ஆய இடங்களில் பல அல்லல் சேர்
ஈனர்கட்கு எளியேன் அலேன்-திரு ஆலவாய் அரன் நிற்கவே.

[1]
ஆகமத்தொடு மந்திரங்கள் அமைந்த சங்கத பங்கமா,
பாகதத்தொடு இரைத்து உரைத்த சனங்கள் வெட்கு உறு பக்கமா,
மா கதக்கரி போல்-திரிந்து, புரிந்து நின்று உணும் மாசு சேர்
ஆகதர்க்கு எளியேன் அலேன்-திரு ஆலவாய் அரன் நிற்கவே.

[2]
அத் தகு பொருள் உண்டும் இல்லையும் என்று நின்றவர்க்கு அச்சமா,
ஒத்து ஒவ்வாமை மொழிந்து வாதில் அழிந்து, எழுந்த கவிப் பெயர்ச்
சத்திரத்தின் மடிந்து ஒடிந்து, சனங்கள் வெட்கு உற நக்கம் ஏய்,
சித்திரர்க்கு எளியேன் அலேன்-திரு ஆலவாய் அரன் நிற்கவே.

[3]
சந்துசேனனும், இந்துசேனனும், தருமசேனனும், கருமை சேர்
கந்துசேனனும், கனகசேனனும், முதல் அது ஆகிய பெயர் கொளா
மந்தி போல்-திரிந்து, ஆரியத்தொடு செந்தமிழ்ப் பயன் அறிகிலா
அந்தகர்க்கு எளியேன் அலேன்-திரு ஆலவாய் அரன் நிற்கவே.

[4]
கூட்டின் ஆர் கிளியின் விருத்தம், உரைத்தது ஓர் எலியின் தொழில்,
பாட்டு மெய் சொலி, பக்கமே செலும் எக்கர்தங்களை, பல் அறம்
காட்டியே வரு மாடு எலாம் கவர் கையரை, கசிவு ஒன்று இலாச்
சேட்டை கட்கு எளியேன் அலேன்-திரு ஆலவாய் அரன் நிற்கவே.

[5]
கனகநந்தியும், புட்பநந்தியும், பவணநந்தியும், குமண மா
சுனகநந்தியும், குனகநந்தியும், திவணநந்தியும் மொழி கொளா
அனகநந்தியர், மது ஒழிந்து அவமே தவம் புரிவோம் எனும்
சினகருக்கு எளியேன் அலேன்-திரு ஆலவாய் அரன் நிற்கவே.

[6]
பந்தணம்(ம்) அவை ஒன்று இலம்; பரிவு ஒன்று இலம்(ம்)! என வாசகம்
மந்தணம் பல பேசி, மாசு அறு சீர்மை இன்றி அநாயமே,
அந்தணம்(ம்), அருகந்தணம், மதிபுத்தணம், மதிசிந்தணச்
சிந்தணர்க்கு எளியேன் அலேன்-திரு ஆலவாய் அரன் நிற்கவே.

[7]
மேல் எனக்கு எதிர் இல்லை என்ற அரக்கனார் மிகை செற்ற தீப்
போலியைப் பணிய(க்)கிலாது, ஒரு பொய்த்தவம் கொடு, குண்டிகை
பீலி கைக்கொடு, பாய் இடுக்கி, நடுக்கியே, பிறர் பின் செலும்
சீலிகட்கு எளியேன் அலேன்-திரு ஆலவாய் அரன் நிற்கவே.

[8]
பூமகற்கும் அரிக்கும் ஓர்வு அரு புண்ணியன்(ன்) அடி போற்றிலார்
சாம் அவத்தையினார்கள் போல்-தலையைப் பறித்து, ஒரு பொய்த்தவம்
வேம் அவத்தை செலுத்தி, மெய்ப் பொடி அட்டி, வாய் சகதிக்கு நேர்
ஆம் அவர்க்கு எளியேன் அலேன்-திரு ஆலவாய் அரன் நிற்கவே.

[9]
தங்களுக்கும் அச் சாக்கியர்க்கும் தரிப்பு ஒணாத நல் சேவடி
எங்கள் நாயகன் ஏத்து ஒழிந்து, இடுக்கே மடுத்து, ஒரு
பொய்த் தவம்
பொங்கு நூல்வழி அன்றியே புலவோர்களைப் பழிக்கும் பொலா
அங்கதர்க்கு எளியேன் அலேன்-திரு ஆலவாய் அரன் நிற்கவே.

[10]
எக்கர் ஆம் அமண்கையருக்கு எளியேன் அலேன், திரு ஆலவாய்ச்
சொக்கன் என் உள் இருக்கவே, துளங்கும் முடித்
தென்னன்முன், இவை
தக்க சீர்ப் புகலிக்கு மன்-தமிழ் நாதன், ஞானசம்பந்தன்-வாய்
ஒக்கவே உரைசெய்த பத்தும் உரைப்பவர்க்கு இடர் இல்லையே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3.047   காட்டு மா அது உரித்து,  
பண் - கௌசிகம்   (திருத்தலம் திருஆலவாய் (மதுரை) ; (திருத்தலம் அருள்தரு மீனாட்சியம்மை உடனுறை அருள்மிகு சொக்கநாதசுவாமி திருவடிகள் போற்றி )
குலச்சிறையார் அரசனை அணுகி ஞானசம்பந்தர் திருமடத்துக்குச் சமணர்கள் இட்ட தீயே நோயாகி வந்துள்ளது. அவர் வந்தால் நோய் தீரலாம் என்றார். மன்னன் ஞானசம்பந்தர் என்ற நாம மந்திரத்தைக் கேட்ட அளவில் அயர்வு நீங்கியதை உணர்ந்து அவரை அழைப்பீராக என்று கூறினான். சமணர்கள் அரசனிடம் இந்நோய் ஞானசம்பந்தரால் தீர்க்கப் பெற்றாலும் தங்களாலேயே தணிந்தது எனப் பொய்யுரைக்க வேண்டினர். மன்னன் நடுநிலை பிறழேன் என மறுத்தான். குலச்சிறை யாரும் அரசியாரும் ஞானசம்பந்தரைச் சென்று தரிசித்துத் திருமடத் திற்குத் தீயிட்ட செயலுக்கு மிக வருந்தியவர்களாய் மன்னன் வெப்பு நோயால் வாடுவதை விண்ணப்பித்துத் தாங்கள் எழுந்தருளி நோயைக் குணப்படுத்தினால் உய்வோம் எனக் கூறி நின்றனர். ஞான சம்பந்தர் சமணர்களோடு செய்யும் வாதில் வென்று தென்னர் கோனுக்குத் திருநீறு அணிவிப்போம் எனக் கூறிப் புறப்பட்டுத் திருக் கோயிலை அடைந்து காட்டு மாவது உரித்து என்ற திருப்பதிகத்தால் போற்றி இறைவன் திருவுளக் குறிப்பை அறிந்தார்.
காட்டு மா அது உரித்து, உரி போர்த்து உடல்,
நாட்டம் மூன்று உடையாய்! உரைசெய்வன், நான்;
வேட்டு, வேள்வி செய்யா அமண்கையரை
ஓட்டி வாது செயத் திரு உள்ளமே?

[1]
மத்தயானையின் ஈர் உரி மூடிய
அத்தனே! அணி ஆலவாயாய்! பணி
பொய்த்த வன் தவ வேடத்தர் அம் சமண்
சித்தரை அழிக்கத் திரு உள்ளமே?

[2]
மண்ணகத்திலும் வானிலும் எங்கும் ஆம்
திண்ணகத் திரு ஆலவாயாய்! அருள்
பெண் அகத்து எழில் சாக்கியப்பேய், அமண்-
தெண்ணர் கற்பு அழிக்கத் திரு உள்ளமே?

[3]
ஓதி ஓத்து அறியா அமண் ஆதரை
வாதில் வென்று அழிக்கத் திரு உள்ளமே?
ஆதியே! திரு ஆலவாய் அண்ணல்!
நீதி ஆக நினைந்து, அருள்செய்திடே!

[4]
வையம் ஆர் புகழாய்! அடியார் தொழும்
செய்கை ஆர் திரு ஆலவாயாய்! செப்பாய்
கையில் உண்டு உழலும் அமண்கையரைப்
பைய வாது செயத் திரு உள்ளமே?

[5]
நாறு சேர் வயல்-தண்டலை மிண்டிய
தேறல் ஆர் திரு ஆலவாயாய்! செப்பாய்
வீறு இலாத் தவ மோட்டு அமண்வேடரைச்
சீறி, வாது செயத் திரு உள்ளமே?

[6]
பண்டு அடித்தவத்தார் பயில்வால்-தொழும்
தொண்டருக்கு எளியாய்! திரு ஆலவாய்
அண்டனே! அமண் கையரை வாதினில்
செண்டு அடித்து, உளறத் திரு உள்ளமே?

[7]
அரக்கன் தான் கிரி ஏற்றவன் தன் முடிச்
செருக்கினைத் தவிர்த்தாய்! திரு ஆலவாய்
பரக்கும் மாண்பு உடையாய்! அமண்பாவரை,
கரக்க, வாதுசெயத் திரு உள்ளமே?

[8]
மாலும் நான்முகனும்(ம்) அறியா நெறி
ஆலவாய் உறையும்(ம்) அண்ணலே! பணி
மேலைவீடு உணரா வெற்று அரையரைச்
சால வாது செயத் திரு உள்ளமே?

[9]
கழிக் கரைப் படு மீன் கவர்வார் அமண்-
அழிப்பரை அழிக்கத் திரு உள்ளமே?
தெழிக்கும் ம்புனல் சூழ் திரு ஆலவாய்
மழுப்படை உடை மைந்தனே! நல்கிடே!

[10]
செந்து எனா முரலும் திரு ஆலவாய்
மைந்தனே! என்று, வல் அமண் ஆசு அற,
சந்தம் ஆர் தமிழ் கேட்ட மெய்ஞ் ஞானசம்-
பந்தன் சொல் பகரும், பழி நீங்கவே!

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3.051   செய்யனே! திரு ஆலவாய் மேவிய ஐயனே!  
பண் - கௌசிகம்   (திருத்தலம் திருஆலவாய் (மதுரை) ; (திருத்தலம் அருள்தரு மீனாட்சியம்மை உடனுறை அருள்மிகு சொக்கநாதசுவாமி திருவடிகள் போற்றி )
ஞானசம்பந்தரோடு உடன் வந்த அடியவர் அந்தணர் முதலானோர் வருகையை அறிந்த சமணர் கண்டு முட்டு ஆயினர். மன்னனிடம் சென்று முறையிட்டனர். தாங்கள் அறிந்த மந்திரத்தால் ஞானசம்பந்தர் தூங்குகின்ற மடத்திற்குத் தீவைக்க அநுமதி பெற்றனர். சமணர் அனலை ஏவிய மந்திரம் ஞானசம்பந்தரின் அடியவர் ஓதும் ஐந்தெழுத்துக்கு முன்னால் பலிதம் ஆகவில்லை. அதை அறிந்த சமணர்கள் ஞானசம்பந்தர் திருமடத்திற்குத் தீ வைத்தனர். ஒருபகுதி தீப்பற்றி எரிந்தது. அடியவர்கள் சமணர்களின் வஞ்சனையை அறிந்து ஞானசம்பந்தரிடம் தெரிவித்தனர். இத்தீ அரசன் முறை செய்யாமை யால் நேர்ந்ததாகும், ஆதலால் இத்தீ அவனைச் சென்று பற்றுதலே முறையாயினும் மங்கையர்க்கரசியாரின் மங்கல நாணுக்கு ஊறு நேராதவாறு பையச் சென்று பாண்டியனைப் பற்றுவதாகுக என்று கூறி செய்யனே திரு என்று பதிகம் ஓதி தீயை ஏவினார்.
பகைவர்கள் தொல்லைகள் நீங்க , நெருப்பு தொல்லைகளில் இருந்து விடுபட, சிறை வாசம் தடுக்க, சிறையில் இருந்து விடுபட ஓதவேண்டிய பதிகம்
செய்யனே! திரு ஆலவாய் மேவிய
ஐயனே! அஞ்சல்! என்று அருள்செய், எனை;
பொய்யர் ஆம் அமணர் கொளுவும் சுடர்
பையவே சென்று, பாண்டியற்கு ஆகவே!

[1]
சித்தனே! திரு ஆலவாய் மேவிய
அத்தனே! அஞ்சல்! என்று அருள்செய், எனை;
எத்தர் ஆம் அமணர் கொளுவும் சுடர்
பத்தி மன், தென்னன், பாண்டியற்கு ஆகவே!

[2]
தக்கன் வேள்வி தகர்த்து அருள் ஆலவாய்ச்
சொக்கனே! அஞ்சல்! என்று அருள்செய், எனை;
எக்கர் ஆம் அமணர் கொளுவும் சுடர்
பக்கமே சென்று, பாண்டியற்கு ஆகவே!

[3]
சிட்டனே! திரு ஆலவாய் மேவிய
அட்டமூர்த்தியனே! அஞ்சல்! என்று அருள்
துட்டர் ஆம் அமணர் கொளுவும் சுடர்
பட்டி மன், தென்னன், பாண்டியற்கு ஆகவே!

[4]
நண்ணலார் புரம் மூன்று எரி ஆலவாய்
அண்ணலே! அஞ்சல்! என்று அருள்செய், எனை;
எண் இலா அமணர் கொளுவும் சுடர்
பண் இயல் தமிழ்ப் பாண்டியற்கு ஆகவே!

[5]
தஞ்சம்! என்று உன் சரண் புகுந்தேனையும்,
அஞ்சல்! என்று அருள், ஆலவாய் அண்ணலே!
வஞ்சம் செய்து அமணர் கொளுவும் சுடர்
பஞ்சவன், தென்னன், பாண்டியற்கு ஆகவே!

[6]
செங்கண் வெள்விடையாய்! திரு ஆலவாய்
அங்கணா! அஞ்சல்! என்று அருள் செய், எனை;
கங்குலார் அமண்கையர் இடும் கனல்,
பங்கம் இல் தென்னன் பாண்டியற்கு ஆகவே!

[7]
தூர்த்தன் வீரம் தொலைத்து அருள் ஆலவாய்
ஆத்தனே! அஞ்சல்! என்று அருள்செய், எனை;
ஏத்து இலா அமணர் கொளுவும் சுடர்
பார்த்திவன், தென்னன், பாண்டியற்கு ஆகவே!

[8]
தாவினான், அயன்தான் அறியா வகை
மேவினாய்! திரு ஆலவாயாய், அருள்
தூ இலா அமணர் கொளுவும் சுடர்
பாவினான், தென்னன், பாண்டியற்கு ஆகவே!

[9]
எண்திசைக்கு எழில் ஆலவாய் மேவிய
அண்டனே! அஞ்சல்! என்று அருள் செய், எனை;
குண்டர் ஆம் அமணர் கொளுவும் சுடர்
பண்டி மன், தென்னன், பாண்டியற்கு ஆகவே!

[10]
அப்பன்-ஆலவாய் ஆதி அருளினால்,
வெப்பம் தென்னவன் மேல் உற, மேதினிக்கு
ஒப்ப, ஞானசம்பந்தன் உரைபத்தும்,
செப்ப வல்லவர் தீது இலாச் செல்வரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3.052   வீடு அலால் அவாய் இலாஅய்,  
பண் - கௌசிகம்   (திருத்தலம் திருஆலவாய் (மதுரை) ; (திருத்தலம் அருள்தரு மீனாட்சியம்மை உடனுறை அருள்மிகு சொக்கநாதசுவாமி திருவடிகள் போற்றி )
திருப்பதிகப் பாடலில் வேந்தனும் ஓங்குக என ஞான சம்பந்தர் அருளிச் செய்ததால் பாண்டியன் கூன் நிமிர்ந்து நின்றசீர் நெடு மாறன் ஆயினான். குலச்சிறையார் குதிரையின் மீது ஏறி ஏட்டினைத் தொடர்ந்து சென்றார். ஏடு எதிரேறிச் செல்வதைக் கண்ட பிள்ளையார் வன்னியும் மத்தமும் என்ற திருப்பதிகத்தை அருளிச் செய்தார். அவ் வேடு வைகையின் வடகரையிலமைந்த ஒரு கோயிலுக்கு அருகே சென்று நின்றது. ஏடு நின்ற கோயில் ஏடகம் எனப் பெற்றது. குலச் சிறையார் அதனை எடுத்து வந்து ஞானசம்பந்தரிடம் சேர்ப்பித்தார். சமணர்கள் தாங்கள் செய்த சபதத்தின்படிக் கழுவேறினர். ஞானசம்பந்தர் பாண்டியமன்னனுடன் ஆலவாய் இறைவர் திருக் கோயில் சென்று வீடலால வாயிலாய் என்ற திருப்பதிகம் பாடி வழிபட்டுத் தம் திருமடத்துக்கு எழுந்தருளினார்.
வீடு அலால் அவாய் இலாஅய், விழுமியார்கள் நின்கழல்
பாடல் ஆலவாய் இலாய்! பரவ நின்ற பண்பனே!
காடு அலால் அவாய் இலாய்! கபாலி! நீள்கடி(ம்) மதில்
கூடல் ஆலவாயிலாய்! குலாயது என்ன கொள்கையே?

[1]
பட்டு இசைந்த அல்குலாள் பாவையாள் ஒர்பாகமா
ஒட்டு இசைந்தது அன்றியும், உச்சியாள் ஒருத்தியா,
கொட்டு இசைந்த ஆடலாய்! கூடல் ஆலவாயிலாய்!
எட்டு இசைந்த மூர்த்தியாய்! இருந்த ஆறு இது என்னையே?

[2]
குற்றம் நீ! குணங்கள் நீ! கூடல் ஆலவாயிலாய்!
சுற்றம் நீ! பிரானும் நீ! தொடர்ந்து இலங்கு சோதி நீ!
கற்ற நூல் கருத்தும் நீ! அருத்தம், இன்பம், என்று இவை
முற்றும் நீ! புகந்து முன் உரைப்பது என், முக(ம்)மனே?

[3]
முதிரும் நீர்ச் சடைமுடி முதல்வ! நீ முழங்கு அழல்
அதிர வீசி ஆடுவாய்! அழகன் நீ! புயங்கன் நீ!
மதுரன் நீ! மணாளன் நீ! மதுரை ஆலவாயிலாய்!
சதுரன் நீ! சதுர்முகன் கபாலம் ஏந்து சம்புவே!

[4]
கோலம் ஆய நீள்மதிள் கூடல் ஆலவாயிலாய்!
பாலன் ஆய தொண்டு செய்து, பண்டும் இன்றும் உன்னையே,
நீலம் ஆய கண்டனே! நின்னை அன்றி, நித்தலும்,
சீலம் ஆய சிந்தையில் தேர்வது இல்லை, தேவரே.

[5]
பொன் தயங்கு-இலங்கு ஒளி(ந்) நலம் குளிர்ந்த புன்சடை
பின் தயங்க ஆடுவாய்! பிஞ்ஞகா! பிறப்பு இலீ!
கொன்றை அம் முடியினாய்! கூடல் ஆலவாயிலாய்!
நின்று இயங்கி ஆடலே நினைப்பதே நியமமே.

[6]
ஆதி அந்தம் ஆயினாய்! ஆலவாயில் அண்ணலே!
சோதி அந்தம் ஆயினாய்! சோதியுள் ஒர் சோதியாய்!
கீதம் வந்த வாய்மையால் கிளர் தருக்கினார்க்கு அல்லால்,
ஓதி வந்த வாய்மையால் உணர்ந்து உரைக்கல் ஆகுமே?

[7]
கறை இலங்கு கண்டனே! கருத்து இலாக் கருங்கடல்-
துறை இலங்கை மன்னனைத் தோள் அடர ஊன்றினாய்!
மறை இலங்கு பாடலாய்! மதுரை ஆலவாயிலாய்!
நிறை இலங்கு நெஞ்சினால் நினைப்பதே நியமமே.

[8]
தா வண(வ்) விடையினாய்! தலைமை ஆக, நாள்தொறும்
கோவண(வ்) உடையினாய்! கூடல் ஆலவாயிலாய்!
தீ வணம் மலர்மிசைத் திசைமுகனும், மாலும், நின்
தூ வணம்(ம்) அளக்கிலார், துளக்கம் எய்துவார்களே

[9]
தேற்றம் இல் வினைத்தொழில்-தேரரும் சமணரும்
போற்று இசைத்து, நின் கழல் புகழ்ந்து புண்ணியம் கொளா
கூற்று உதைத்த தாளினாய்! கூடல் ஆலவாயிலாய்!
நால்-திசைக்கும் மூர்த்தி ஆகி நின்றது என்ன நன்மையே?

[10]
போய நீர் வளம் கொளும் பொரு புனல் புகலியான்-
பாய கேள்வி ஞானசம்பந்தன்-நல்ல பண்பினால்,
ஆய சொல்லின் மாலைகொண்டு, ஆலவாயில் அண்ணலைத்
தீய தீர எண்ணுவார்கள் சிந்தை ஆவர், தேவரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3.054   வாழ்க அந்தணர், வானவர், ஆன்  
பண் - கௌசிகம்   (திருத்தலம் திருஆலவாய் (மதுரை) ; (திருத்தலம் அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
சமணர்கள் தங்கள் ஏடு எரிந்து சாம்பலானதைக் கண்டு மன்னனை நோக்கி ஓர் வாதினை மும்முறை செய்து உண்மை காணுதலே முறையாகும். ஆதலால் இருதிறத்தாரும் தத்தம் சமய உண்மைகள் எழுதிய ஏட்டினை ஆற்றில் இடும்போது எவருடைய ஏடு எதிரேறிச் செல்கின்றதோ அவர்கள் சமயமே மெய்ச்சமயம் எனக் கொள்ளலாம் என்றனர். அப்பொழுது அமைச்சர் குலச்சிறையார் இதிலும் தோற்றவர்களுக்கு ஏற்படும் இழப்பு யாது எனக் கேட்டார். சமணர்கள் இவ்வாதில் தோல்வியுற்றோமானால் எங்களை இவ் வேந்தன் கழுவேற்றி முறை செய்யலாம் என்றனர். மன்னனும் உடன் பட்டான். ஞானசம்பந்தரும் சமண முனிவர்களும் வைகையாற்றின் கரையை அடைந்தனர் முதலில் சமணர்கள் தங்கள் சமய உண்மை யாகக் கூறும் அஸ்தி நாஸ்தி என்ற வசனத்தை எழுதி ஆற்றிலிட்டனர். அம்மொழி ஆற்று நீரோட்டத்தை எதிர்க்கும் ஆற்றலின்றி நீர் ஓடும் நெறியிலேயே விரைந்தோடிற்று. அதனைக் கண்ட சமணர்கள் நீவிரும் உமது சமய உண்மையை எழுதி நீரில் இடுக எனக்கூறினர். ஞான சம்பந்தர், திருப்பாசுரம் எனப்படும் வாழ்க அந்தணர் என்னும் திருப்பதிகத்தை அருளிச் செய்து, அதனை ஏட்டில் எழுதச் செய்து அவ் ஏட்டை ஆற்றில் இட்டருளினார். ஏடு வைகை ஆற்று வெள்ளத்தைக் கிழித்து எதிர் ஏறிச் சென்றது.
கூன் நிமிற
வாழ்க அந்தணர், வானவர், ஆன் இனம்!
வீழ்க, தண்புனல்! வேந்தனும் ஓங்குக!
ஆழ்க, தீயது எல்லாம்! அரன் நாமமே
சூழ்க! வையகமும் துயர் தீர்கவே!

[1]
அரிய காட்சியராய், தமது அங்கை சேர்
எரியர்; ஏறு உகந்து ஏறுவர்; கண்டமும்
கரியர்; காடு உறை வாழ்க்கையர்; ஆயினும்,
பெரியர்; ஆர் அறிவார், அவர் பெற்றியே?

[2]
வெந்த சாம்பல் விரை எனப் பூசியே,
தந்தையாரொடு தாய் இலர்; தம்மையே
சிந்தியா எழுவார் வினை தீர்ப்பரால்;
எந்தையார் அவர் எவ்வகையார் கொலோ!

[3]
ஆட்பாலவர்க்கு அருளும் வண்ணமும் ஆதிமாண்பும்
கேட்பான் புகில், அளவு இல்லை; கிளக்க வேண்டா;
கோள்பாலனவும் வினையும் குறுகாமை, எந்தை
தாள்பால் வணங்கித் தலைநின்று இவை கேட்க, தக்கார்

[4]
ஏதுக்களாலும் எடுத்த மொழியாலும் மிக்குச்
சோதிக்க வேண்டா; சுடர்விட்டு உளன், எங்கள் சோதி;
மா துக்கம் நீங்கல் உறுவீர், மனம்பற்றி வாழ்மின்!
சாதுக்கள் மிக்கீர், இறையே வந்து சார்மின்களே

[5]
ஆடும்(ம்) எனவும், அருங்கூற்றம் உதைத்து வேதம்
பாடும்(ம்) எனவும், புகழ் அல்லது, பாவம் நீங்கக்
கேடும் பிறப்பும்(ம்) அறுக்கும்(ம்) எனக் கேட்டிர் ஆகில்,
நாடும் திறத்தார்க்கு அருள் அல்லது, நாட்டல் ஆமே?

[6]
கடி சேர்ந்த போது மலர் ஆன கைக் கொண்டு, நல்ல
படி சேர்ந்த பால்கொண்டு, அங்கு ஆட்டிட, தாதை பண்டு
முடி சேர்ந்த காலை அற வெட்டிட, முக்கண் மூர்த்தி
அடி சேர்ந்த வண்ணம்(ம்) அறிவார் சொலக் கேட்டும் அன்றே!

[7]
வேதமுதல்வன் முதல் ஆக விளங்கி, வையம்
ஏதப்படாமை, உலகத்தவர் ஏத்தல் செய்ய,
பூதமுதல்வன் முதலே முதலாப் பொலிந்த
சூதன் ஒலிமாலை என்றே கலிக்கோவை சொல்லே!

[8]
பார் ஆழிவட்டம் பகையால் நலிந்து ஆட்ட, வாடி
பேர் ஆழியானது இடர் கண்டு, அருள் செய்தல் பேணி,
நீர் ஆழி விட்டு ஏறி நெஞ்சு இடம் கொண்டவர்க்குப்
போர் ஆழி ஈந்த புகழும் புகழ் உற்றது அன்றே!

[9]
மால் ஆயவனும் மறைவல்லவன் நான்முகனும்
பால் ஆய தேவர் பகரில், அமுது ஊட்டல் பேணி,
கால் ஆய முந்நீர் கடைந்தார்க்கு அரிது ஆய் எழுந்த
ஆலாலம் உண்டு, அங்கு அமரர்க்கு அருள் செய்தது ஆமே!

[10]
அற்று அன்றி அம் தண் மதுரைத் தொகை ஆக்கினானும்,
தெற்று என்ற தெய்வம் தெளியார் கரைக்கு ஓலை தெண் நீர்ப்
பற்று இன்றிப் பாங்கு எதிர்வின் ஊரவும், பண்பு நோக்கில்,
பெற்றொன்று உயர்த்த பெருமான் பெருமானும் அன்றே!

[11]
நல்லார்கள் சேர் புகலி ஞானசம்பந்தன், நல்ல
எல்லார்களும் பரவும் ஈசனை ஏத்து பாடல்,
பல்லார்களும் மதிக்கப் பாசுரம் சொன்ன பத்தும்,
வல்லார்கள், வானோர் உலகு ஆளவும் வல்லர் அன்றே!

[12]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3.087   தளிர் இள வளர் ஒளி  
பண் - சாதாரி   (திருத்தலம் திருஆலவாய் (மதுரை) ; (திருத்தலம் அருள்தரு போகமார்த்தபூண்முலையம்மை உடனுறை அருள்மிகு தெர்ப்பாரணியர் திருவடிகள் போற்றி )
பாண்டியனது வெப்பு நோயைப் போக்க இயலாத சமணர்கள் தருக்க வாதம் புரிவதை விடுத்துத் தீயிலும் நீரிலும் அவரை வெல்ல லாம் என்று எண்ணினார்கள். திருஞானசம்பந்தர் இனி உங்கள் வாய்மையைக் கூறுங்கள் என்றார். சமணர்கள் இருதிறத்தாரும் தாங்கள் கண்ட பேருண்மையை ஏட்டில் எழுதி நெருப்பில் இட்டால் வேகாத ஏடு எவருடையதோ அவர்கள் சமயமே மெய்ச்சமயம் எனக் கொள்வோம் என்றனர். ஞானசம்பந்தரும் அதற்கிசைந்தார். பாண்டியன் தீக்குண்டம் அமைக்கக் கட்டளையிட்டான். ஞானசம்பந்தர் தாம் அருளிய திருப்பதிகச் சுவடியைக் கொணரச் செய்து வழிபட்டு அதனை விரித்தருளினார். போகமார்த்த பூண்முலையாள் என்ற திருநள்ளாற்றுத் திருப்பதிகம் உதயமாயிற்று. ஞானசம்பந்தர் நள்ளாற்றிறைவனைப் போற்றி அவ் ஏட்டினை எடுத்து அத்திருப்பதிகம் அனலிடை வேகாதிருக்க வேண்டி தளிரிள வள ரொளி என்றதொரு திருப்பதிகம் அருளி எடுத்த ஏட்டினைத் தீயில் இட்டார். அவ்வேடு தீயில் எரியாது பச்சென்றிருந்தது.சமணர்கள் தங்கள் நூற் பொருள் எழுதப் பெற்றதொரு ஏட்டினைத் தீயில் இட்டனர். அது எரிந்து கரிந்து சாம்பலாயிற்று. ஞானசம்பந்தர் குறித்த நேரம் வரை காத்திருந்து தான் இட்ட ஏட்டை யாவரும் காண எடுத்தருளினார். அது முன்னையினும் பச்சென்றிருந்த காரணத்தால் பச்சைத் திருப்பதிகம் எனப் போற்றப்பெறுவதாயிற்று.
தளிர் இள வளர் ஒளி தனது எழில் தரு திகழ் மலைமகள்
குளிர் இள வளர் ஒளி வன முலை இணை அவை குலவலின்,
நளிர் இள வளர் ஒளி மருவும் நள்ளாறர் தம் நாமமே,
மிளிர் இள வளர் எரி இடில், இவை பழுது இலை;
மெய்ம்மையே!

[1]
போது அமர்தரு புரிகுழல் எழில் மலைமகள் பூண் அணி
சீதம் அது அணிதரு முகிழ் இளவனமுலை செறிதலின்,
நாதம் அது எழில் உரு அனைய நள்ளாறர் தம் நாமமே,
மீ தமது எரியினில் இடில், இவை பழுது இலை; மெய்ம்மையே!

[2]
இட்டு உறும் மணி அணி இணர் புணர் வளர் ஒளி எழில் வடம்
கட்டு உறு கதிர் இளவனமுலை இணையொடு கலவலின்,
நட்டு உறு செறி வயல் மருவு நள்ளாறர் தம் நாமமே;
இட்டு உறும் எரியினில் இடில், இவை பழுது இலை; `மெய்ம்மையே!

[3]
மைச்சு அணி வரி அரி நயனி தொல் மலைமகள் பயன் உறு
கச்சு அணி கதிர் இளவனமுலை அவையொடு கலவலின்,
நச்சு அணி மிடறு உடை அடிகள் நள்ளாறர் தம் நாமமே,
மெச்சு அணி எரியினில் இடில், இவை பழுது இலை;
மெய்ம்மையே!

[4]
பண் இயல் மலைமகள் கதிர் விடு பரு மணி அணி நிறக்
கண் இயல் கலசம் அது அன முலை இணையொடு கலவலின்,
நண்ணிய குளிர்புனல் புகுதும் நள்ளாறர் தம் நாமமே,
விண் இயல் எரியினில் இடில், இவை பழுது இலை;
மெய்ம்மையே!

[5]
போது உறு புரிகுழல் மலைமகள் இள வளர் பொன் அணி
சூது உறு தளிர் நிற வனமுலை அவையொடு துதைதலின்,
தாது உறு நிறம் உடை அடிகள் நள்ளாறர் தம் நாமமே,
மீது உறும் எரியினில் இடில், இவை பழுது இலை; மெய்ம்மையே!

[6]
கார் மலி நெறிபுரி சுரிகுழல் மலைமகள் கவின் உறு
சீர் மலிதரும் மணி அணி முலை திகழ்வொடு செறிதலின்,
தார் மலி நகுதலை உடைய நள்ளாறர் தம் நாமமே,
ஏர் மலி எரியினில் இடில், இவை பழுது இலை;
மெய்ம்மையே!

[7]
மன்னிய வளர் ஒளி மலைமகள் தளிர் நிறம் மதம் மிகு
பொன் இயல் மணி அணி கலசம் அது அன முலை
புணர்தலின்,
தன் இயல் தசமுகன் நெறிய, நள்ளாறர் தம் நாமமே,
மின் இயல் எரியினில் இடில், இவை பழுது இலை;
மெய்ம்மையே!

[8]
கான் முக மயில் இயல் மலைமகள் கதிர் விடு கனம் மிகு
பால் முகம் அயல் பணை இணை முலை துணையொடு பயிறலின்,
நான்முகன் அரி அறிவு அரிய நள்ளாறர் தம் நாமமே,
மேல் முக எரியினில் இடில், இவை பழுது இலை;
மெய்ம்மையே!

[9]
அத்திர நயனி தொல் மலைமகள் பயன் உறும் அதிசயச்
சித்திர மணி அணி திகழ் முலை இணையொடு செறிதலின்,
புத்தரொடு அமணர் பொய் பெயரும் நள்ளாறர் தம் நாமமே,
மெய்த் திரள் எரியினில் இடில், இவை பழுது இலை; மெய்ம்மையே!

[10]
சிற்றிடை அரிவை தன் வனமுலை இணையொடு செறிதரும்
நல்-திறம் உறு, கழுமல நகர் ஞானசம்பந்தன
கொற்றவன் எதிர் இடை எரியினில் இட, இவை கூறிய
சொல்-தெரி ஒருபதும் அறிபவர் துயர் இலர்; தூயரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3.108   வேத வேள்வியை நிந்தனை செய்து  
பண் - பழம்பஞ்சுரம்   (திருத்தலம் திருஆலவாய் (மதுரை) ; (திருத்தலம் அருள்தரு மீனாட்சியம்மை உடனுறை அருள்மிகு சொக்கநாதசுவாமி திருவடிகள் போற்றி )
சமணர் மேற்கொள்ளும் வாதங்களிலும் வெற்றி நல்க வேத வேள்வியை என்ற திருப்பதிகம் பாடி இறைவனிடம் விடை பெற்று வெளிவந்து சிவிகையில் ஏறி மன்னனின் மாளிகையை அடைந்தார்.
வழக்குகளில் வெற்றி பெற, கடன் தொல்லைகள் நீங்கி, கடன் பெறாமலே வாழ்வதற்கு ஓதவேண்டிய பதிகம்
வேத வேள்வியை நிந்தனை செய்து உழல்
ஆதம் இ(ல்)லி அமணொடு தேரரை
வாதில் வென்று அழிக்கத் திரு உள்ளமே?
பாதி மாது உடன் ஆய பரமனே!
ஞாலம் நின் புகழே மிக வேண்டும், தென்-
ஆலவாயில் உறையும் எம் ஆதியே!

[1]
வைதிகத்தின் வழி ஒழுகாத அக்
கைதவம்(ம்) உடைக் கார் அமண் தேரரை
எய்தி, வாதுசெயத் திரு உள்ளமே?
மை திகழ்தரு மா மணிகண்டனே!
ஞாலம் நின் புகழே மிக வேண்டும், தென்-
ஆலவாயில் உறையும் எம் ஆதியே!

[2]
மறை வழக்கம் இலாத மா பாவிகள்
பறி தலைக் கையர், பாய் உடுப்பார்களை
முறிய, வாதுசெயத் திரு உள்ளமே?
மறி உலாம் கையில் மா மழுவாளனே!
ஞாலம் நின் புகழே மிக வேண்டும், தென்-
ஆலவாயில் உறையும் எம் ஆதியே!

[3]
அறுத்த அங்கம் ஆறு ஆயின நீர்மையைக்
கறுத்து வாழ் அமண்கையர்கள் தம்மொடும்
செறுத்து, வாதுசெயத் திரு உள்ளமே?
முறித்த வான் மதிக்கண்ணி முதல்வனே!
ஞாலம் நின் புகழே மிக வேண்டும், தென்-
ஆலவாயில் உறையும் எம் ஆதியே!

[4]
அந்தணாளர் புரியும் அருமறை
சிந்தை செய்யா அருகர் திறங்களைச்
சிந்த, வாதுசெயத் திரு உள்ளமே?
வெந்த நீறு அது அணியும் விகிர்தனே!
ஞாலம் நின் புகழே மிக வேண்டும், தென்-
ஆலவாயில் உறையும் எம் ஆதியே!

[5]
வேட்டு வேள்வி செயும் பொருளை விளி
மூட்டு சிந்தை முருட்டு அமண்குண்டரை
ஓட்டி, வாதுசெயத் திரு உள்ளமே?
காட்டில் ஆனை உரித்த எம் கள்வனே!
ஞாலம் நின் புகழே மிக வேண்டும், தென்-
ஆலவாயில் உறையும் எம் ஆதியே!

[6]
அழல் அது ஓம்பும் அருமறையோர் திறம்
விழல் அது என்னும் அருகர் திறத்திறம்
கழல், வாதுசெயத் திரு உள்ளமே?
தழல் இலங்கு திரு உருச் சைவனே!
ஞாலம் நின் புகழே மிக வேண்டும், தென்-
ஆலவாயில் உறையும் எம் ஆதியே!

[7]
நீற்று மேனியர் ஆயினர் மேல் உற்ற
காற்றுக் கொள்ளவும் நில்லா அமணரைத்
தேற்றி, வாதுசெயத் திரு உள்ளமே?
ஆற்ற வாள் அரக்கற்கும் அருளினாய்!
ஞாலம் நின் புகழே மிக வேண்டும், தென்-
ஆலவாயில் உறையும் எம் ஆதியே!

[8]
நீல மேனி அமணர் திறத்து நின்
சீலம் வாது செயத் திரு உள்ளமே?
மாலும் நான்முகனும் காண்பு அரியது ஓர்
கோலம் மேனி அது ஆகிய குன்றமே!
ஞாலம் நின் புகழே மிக வேண்டும், தென்-
ஆலவாயில் உறையும் எம் ஆதியே!

[9]
அன்று முப்புரம் செற்ற அழக! நின்
துன்று பொன்கழல் பேணா அருகரைத்
தென்ற வாதுசெயத் திரு உள்ளமே?
கன்று சாக்கியர் காணாத் தலைவனே!
ஞாலம் நின் புகழே மிக வேண்டும், தென்-
ஆலவாயில் உறையும் எம் ஆதியே!

[10]
கூடல் ஆலவாய்க்கோனை விடைகொண்டு
வாடல் மேனி அமணரை வாட்டிட,
மாடக் காழிச் சம்பந்தன் மதித்த இப்
பாடல் வல்லவர் பாக்கியவாளரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3.115   ஆல நீழல் உகந்தது இருக்கையே;  
பண் - பழம்பஞ்சுரம்   (திருத்தலம் திருஆலவாய் (மதுரை) ; (திருத்தலம் அருள்தரு மீனாட்சியம்மை உடனுறை அருள்மிகு சொக்கநாதசுவாமி திருவடிகள் போற்றி )
ஆல நீழல் உகந்தது இருக்கையே; ஆன பாடல் உகந்தது இருக்கையே;
பாலின் நேர் மொழியாள் ஒருபங்கனே; பாதம் ஓதலர் சேர் புர பங்கனே;
கோலம் நீறு அணி மே தகு பூதனே; கோது இலார் மனம் மேவிய பூதனே;
ஆல நஞ்சு அமுது உண்ட களத்தனே ஆலவாய் உறை
அண்டர்கள் அத்தனே.

[1]
பாதி ஆய் உடன் கொண்டது மாலையே; பம்பு தார் மலர்க்
கொன்றை நல்மாலையே;
கோது இல் நீறு அது பூசிடும் ஆகனே; கொண்ட நன்
கையில் மான் இடம் ஆகனே;
நாதன் நாள்தொறும் ஆடுவது ஆன் ஐயே; நாடி அன்று
உரிசெய்ததும் ஆனையே;
வேத நூல் பயில்கின்றது வாயிலே; விகிர்தன் ஊர் திரு ஆல நல்வாயிலே.

[2]
காடு நீடது உறப் பல கத்தனே; காதலால் நினைவார்தம் அகத்தனே;
பாடு பேயோடு பூதம் மசிக்கவே, பல்பிணத் தசை நாடி அசிக்கவே;
நீடும் மாநடம் ஆட விருப்பனே; நின் அடித் தொழ நாளும் இருப்பனே;
ஆடல் நீள்சடை மேவிய அப்பனே ஆலவாயினில் மேவிய அப்பனே.

[3]
பண்டு அயன்தலை ஒன்றும் அறுத்தியே; பாதம் ஓதினர்
பாவம் மறுத்தியே;
துண்ட வெண்பிறை சென்னி இருத்தியே; தூய வெள் எருது ஏறி இருத்தியே;
கண்டு காமனை வேவ விழித்தியே; காதல் இல்லவர் தம்மை இழித்தியே
அண்ட நாயகனே! மிகு கண்டனே! ஆலவாயினில்
மேவிய(அ) கண்டனே!

[4]
சென்று தாதை உகுத்தனன் பாலையே சீறி, அன்பு
செகுத்தனன்பால் ஐயே
வென்றி சேர் மழுக்கொண்டு, முன்காலையே, வீட வெட்டிடக்
கண்டு, முன் காலையே,
நின்ற மாணியை, ஓடின கங்கையால் நிலவ மல்கி உதித்து, அனகம் கையால்,
அன்று, நின் உரு ஆகத் தடவியே! ஆலவாய், அரன்
நாகத்து அடவியே.

[5]
நக்கம் ஏகுவர், நாடும் ஓர் ஊருமே; நாதன் மேனியில்
மாசுணம் ஊருமே;
தக்க பூ, மனைச் சுற்ற, கருளொடே, தாரம், உய்த்தது,
பாணற்கு, அருளொடே;
மிக்க தென்னவன் தேவிக்கு அணியையே மெல்ல நல்கிய
தொண்டர்க்கு அணியையே;
அக்கினார் அமுது உண்கலன் ஓடுமே; ஆலவாய், அரனார்
உமையோடுமே.

[6]
வெய்யவன் பல் உகுத்தது குட்டியே; வெங்கண் மாசுணம், கையது, குட்டியே;
ஐயனே! அனல் ஆடிய மெய்யனே! அன்பினால்
நினைவார்க்கு அருள் மெய்யனே!
வையம் உய்ய அன்று உண்டது காளமே; வள்ளல் கையது
மேவு கங்காளமே;
ஐயம் ஏற்பது உரைப்பது வீண், ஐயே! ஆலவாய் அரன்
கையது வீணையே.

[7]
தோள்கள் பத்தொடு பத்தும் அயக்கியே, தொக்க தேவர்
செருக்கை மயக்கியே,
வாள் அரக்கன் நிலத்துக் களித்துமே, வந்து அ(ம்)மால்வரை கண்டு உகளித்துமே,
நீள்பொருப்பை எடுத்த உன்மத்தனே, நின் விரல்-தலையால் மதம் மத்தனே!
ஆளும் ஆதி முறித்தது மெய்கொலோ? ஆலவாய் அரன்
உய்த்ததும் மெய்கொலோ?

[8]
பங்கயத்து உள நான்முகன், மாலொடே, பாதம் நீள் முடி
நேடிட, மாலொடே,
துங்க நல்-தழலின் உருஆயுமே; தூய பாடல் பயின்றது, வாயுமே;
செங்கயல் கணினார் இடு பிச்சையே சென்று கொண்டு,
உரைசெய்வது பிச்சு ஐயே!
அங்கியைத் திகழ்விப்பது இடக்கையே; ஆலவாய், அரனாரது
இடக் கையே.

[9]
தேரரோடு அமணர்க்கு நல்கானையே; தேவர் நாள்தொறும்
சேர்வது கானையே;
கோரம் அட்டது புண்டரிகத்தையே; கொண்ட, நீள் கழல் புண்டரிகத்தையே;
நேர் இல் ஊர்கள் அழித்தது நாகமே; நீள்சடைத்
திகழ்கின்றது நாகமே;
ஆரம் ஆக உகந்ததும் என்பு அதே; ஆலவாய், அரனார்
இடம் என்பதே.

[10]
ஈன ஞானிகள் தம்மொடு விரகனே! ஏறு பல்பொருள்
முத்தமிழ் விரகனே,
ஆன காழியுள் ஞானசம்பந்தனே ஆலவாயினில் மேய சம்பந்தனே!
ஆன வானவர் வாயின் உளத்தனே! அன்பர் ஆனவர்
வாயினுள் அத்தனே!
நான் உரைத்தன செந்தமிழ் பத்துமே வல்லவர்க்கு, இவை
நற்று அமிழ் பத்துமே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3.120   மங்கையர்க்கு அரசி வளவர்கோன் பாவை,  
பண் - புறநீர்மை   (திருத்தலம் திருஆலவாய் (மதுரை) ; (திருத்தலம் அருள்தரு மீனாட்சியம்மை உடனுறை அருள்மிகு சொக்கநாதசுவாமி திருவடிகள் போற்றி )
மங்கையர்க்கு அரசி வளவர்கோன் பாவை, வரி வளைக் கைம் மடமானி,
பங்கயச்செல்வி, பாண்டிமாதேவி பணி செய்து நாள்தொறும் பரவ,
பொங்கு அழல் உருவன், பூதநாயகன், நால்வேதமும் பொருள்களும் அருளி
அம் கயல்கண்ணிதன்னொடும் அமர்ந்த ஆலவாய் ஆவதும் இதுவே.

[1]
வெற்றவே அடியார் அடிமிசை வீழும் விருப்பினன், வெள்ளைநீறு அணியும்
கொற்றவன்தனக்கு மந்திரி ஆய குலச்சிறை குலாவி நின்று ஏத்தும்
ஒற்றை வெள்விடையன், உம்பரார்தலைவன், உலகினில் இயற்கையை ஒழிந்திட்டு
அற்றவர்க்கு அற்ற சிவன், உறைகின்ற ஆலவாய் ஆவதும் இதுவே.

[2]
செந்துவர்வாயாள் சேல் அன கண்ணாள், சிவன் திருநீற்றினை வளர்க்கும்
பந்து அணை விரலாள் பாண்டிமாதேவி பணி செய, பார் இடை நிலவும்
சந்தம் ஆர் தரளம், பாம்பு, நீர், மத்தம், தண் எருக்கம்மலர், வன்னி,
அந்தி வான்மதி, சேர் சடைமுடி அண்ணல் ஆலவாய் ஆவதும் இதுவே.

[3]
கணங்கள் ஆய் வரினும், தமியராய் வரினும், அடியவர் தங்களைக் கண்டால்,
குணம்கொடு பணியும் குலச்சிறை குலாவுங் கோபுரம் சூழ் மணிக் கோயில்
மணம் கமழ் கொன்றை, வாள் அரா, மதியம், வன்னி, வண் கூவிளமாலை,
அணங்கு, வீற்றிருந்த சடைமுடி அண்ணல் ஆலவாய் ஆவதும் இதுவே.

[4]
செய்யதாமரைமேல் அன்னமே அனைய சேயிழை திருநுதல் செல்வி,
பை அரவு அல்குல் பாண்டிமாதேவி நாள்தொறும் பணிந்து இனிது ஏத்த,
வெய்ய வேல், சூலம், பாசம், அங்குசம், மான், விரி கதிர் மழு உடன் தரித்த
ஐயனார் உமையோடு இன்பு உறுகின்ற ஆலவாய் ஆவதும் இதுவே.

[5]
நலம் இலர் ஆக, நலம் அது உண்டு ஆக, நாடவர் நாடு அறிகின்ற
குலம் இலர் ஆக, குலம் அது உண்டு ஆக, தவம் பணி குலச்சிறை பரவும்
கலை மலி கரத்தன், மூஇலைவேலன், கரிஉரி மூடிய கண்டன்,
அலை மலி புனல் சேர் சடைமுடி அண்ணல், ஆலவாய் ஆவதும் இதுவே.

[6]
முத்தின் தாழ்வடமும் சந்தனக்குழம்பும் நீறும் தன் மார்பினில் முயங்க,
பத்தி ஆர்கின்ற பாண்டிமாதேவி பாங்கொடு பணிசெய, நின்ற
சுத்தம் ஆர் பளிங்கின் பெருமலை உடனே சுடர் மரகதம் அடுத்தால் போல்,
அத்தனார் உமையோடு இன்பு உறுகின்ற ஆலவாய் ஆவதும் இதுவே.

[7]
நா அணங்கு இயல்பு ஆம் அஞ்சு எழுத்து ஓதி, நல்லராய் நல் இயல்பு ஆகும்
கோவணம் பூதி சாதனம் கண்டால்-தொழுது எழு குலச்சிறை போற்ற,
ஏ அணங்கு இயல்பு ஆம் இராவணன் திண்தோள் இருபதும் நெரிதர ஊன்றி,
ஆவணம் கொண்ட சடைமுடி அண்ணல் ஆலவாய் ஆவதும் இதுவே.

[8]
மண் எலாம் நிகழ மன்னனாய் மன்னும் மணிமுடிச்சோழன் தன் மகள் ஆம்
பண்ணின் நேர் மொழியாள் பாண்டிமாதேவி பாங்கினால் பணி செய்து பரவ,
விண் உளார் இருவர் கீழொடு மேலும் அளப்பு அரிது ஆம் வகை நின்ற
அண்ணலார் உமையோடு இன்பு உறுகின்ற ஆலவாய் ஆவதும் இதுவே.

[9]
தொண்டராய் உள்ளார் திசைதிசைதொறும் தொழுது தன் குணத்தினைக் குலாவக்
கண்டு, நாள்தோறும் இன்பு உறுகின்ற குலச்சிறை கருதி நின்று ஏத்த,
குண்டராய் உள்ளார் சாக்கியர் தங்கள் குறியின் கண் நெறி இடை வாரா
அண்ட நாயகன் தான் அமர்ந்து வீற்றிருந்த ஆலவாய் ஆவதும் இதுவே.

[10]
பல்-நலம் புணரும் பாண்டிமாதேவி, குலச்சிறை, எனும் இவர் பணியும்
அந் நலம் பெறு சீர் ஆலவாய் ஈசன் திருவடி ஆங்கு அவை போற்றி,
கன்னல் அம் பெரிய காழியுள் ஞானசம்பந்தன் செந்தமிழ் இவை கொண்டு
இன்நலம் பாட வல்லவர், இமையோர் ஏத்த, வீற்றிருப்பவர், இனிதே.

[11]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4.062   வேதியா! வேதகீதா! விண்ணவர் அண்ணா!  
பண் - கொல்லி   (திருத்தலம் திருஆலவாய் (மதுரை) ; (திருத்தலம் அருள்தரு மீனாட்சியம்மை உடனுறை அருள்மிகு சொக்கநாதசுவாமி திருவடிகள் போற்றி )
வேதியா! வேதகீதா! விண்ணவர் அண்ணா! என்று என்று
ஓதியே, மலர்கள் தூவி, ஒடுங்கி, நின் கழல்கள் காண-
பாதி ஓர் பெண்ணை வைத்தாய்! படர்சடை மதியம் சூடும்
ஆதியே! ஆலவாயில் அப்பனே!-அருள் செயாயே!

[1]
நம்பனே! நான் முகத்தாய்! நாதனே! ஞான மூர்த்தி!
என் பொனே! ஈசா! என்று என்று ஏத்தி நான் ஏசற்று, என்றும்
பின்பினே திரிந்து நாயேன் பேர்த்து இனிப் பிறவா வண்ணம்-
அன்பனே! ஆலவாயில் அப்பனே!-அருள் செயாயே!

[2]
ஒரு மருந்து ஆகி உள்ளாய், உம்பரோடு உலகுக்கு எல்லாம்;
பெரு மருந்து ஆகி நின்றாய்; பேர் அமுதின் சுவை ஆய்க்
கரு மருந்து ஆகி உள்ளாய்;-ஆளும் வல்வினைகள் தீர்க்கும்
அரு மருந்து! ஆலவாயில் அப்பனே!-அருள் செயாயே!

[3]
செய்ய நின் கமல பாதம் சேருமா தேவர் தேவே!
மை அணி கண்டத்தானே! மான்மறி மழு ஒன்று ஏந்தும்
சைவனே!-சால ஞானம் கற்று அறிவு இலாத நாயேன்
ஐயனே! ஆலவாயில் அப்பனே!-அருள் செயாயே!

[4]
வெண் தலை கையில் ஏந்தி மிகவும் ஊர் பலி கொண்டு என்றும்
உண்டதும் இல்லை; சொல்லில், உண்டது நஞ்சு தன்னை;
பண்டு உனை நினைய மாட்டாப் பளகனேன் உளம் அது ஆர,
அண்டனே! ஆலவாயில் அப்பனே!-அருள் செயாயே!

[5]
எஞ்சல் இல் புகல் இது என்று என்று ஏத்தி நான் ஏசற்று, என்றும்
வஞ்சகம் ஒன்றும் இன்றி மலர் அடி காணும் வண்ணம்
நஞ்சினை மிடற்றில் வைத்த நன் பொருள் பதமே! நாயேற்கு
அஞ்சல்! என்று-ஆலவாயில் அப்பனே!-அருள் செயாயே!

[6]
வழு இலாது உன்னை வாழ்த்தி வழிபடும் தொண்டனேன் உன்
செழு மலர்ப்பாதம் காண-தெண் திரை நஞ்சம் உண்ட
குழகனே! கோலவில்லீ! கூத்தனே! மாத்து ஆய் உள்
அழகனே! ஆலவாயில் அப்பனே!-அருள் செயாயே!

[7]
நறுமலர் நீரும் கொண்டு நாள் தொறும் ஏத்தி வாழ்த்திச்
செறிவன சித்தம் வைத்துத் திருவடி சேரும் வண்ணம்
மறி கடல் வண்ணன் பாகா! மாமறை அங்கம் ஆறும்
அறிவனே! ஆலவாயில் அப்பனே!-அருள் செயாயே!

[8]
நலம் திகழ் வாயில் நூலால் சருகு இலைப் பந்தர் செய்த
சிலந்தியை அரசு அது ஆள அருளினாய் என்று திண்ணம்
கலந்து உடன் வந்து நின் தாள் கருதி நான் காண்பது ஆக
அலந்தனன்;-ஆலவாயில் அப்பனே!-அருள் செயாயே!

[9]
பொடிக்கொடு பூசி, பொல்லாக் குரம்பையில் புந்தி, ஒன்றி,
பிடித்து நின் தாள்கள் என்றும் பிதற்றி, நான் இருக்கமாட்டேன்-
எடுப்பன் என்று இலங்கைக் கோன் வந்து எடுத்தலும், இருபது(த்) தோள
அடர்த்தனே! ஆலவாயில் அப்பனே!-அருள் செயாயே!

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
6.019   முளைத்தானை, எல்லார்க்கும் முன்னே தோன்றி;  
பண் - திருத்தாண்டகம்   (திருத்தலம் திருஆலவாய் (மதுரை) ; (திருத்தலம் அருள்தரு மீனாட்சியம்மை உடனுறை அருள்மிகு சொக்கநாதசுவாமி திருவடிகள் போற்றி )
முளைத்தானை, எல்லார்க்கும் முன்னே தோன்றி; முதிரும் சடைமுடி மேல் முகிழ்வெண்திங்கள்
வளைத்தானை; வல் அசுரர் புரங்கள் மூன்றும், வரை சிலையா வாசுகி மா நாணாக் கோத்துத்
துளைத்தானை, சுடு சரத்தால் துவள நீறா; தூ  முத்த வெண் முறுவல் உமையோடு ஆடித்
திளைத்தானை;-தென் கூடல்-திரு ஆலவா அய்ச் சிவன் அடியே சிந்திக்கப் பெற்றேன், நானே.

[1]
விண்ணுலகின் மேலார்கள் மேலான் தன்னை, மேல் ஆடு புரம் மூன்றும் பொடி செய்தானை,
பண் நிலவு பைம்பொழில் சூழ் பழனத்தானை, பசும் பொன்னின் நிறத்தானை, பால் நீற்றானை,
உள்-நிலவு சடைக்கற்றைக் கங்கையாளைக் கரந்து உமையோடு உடன் ஆகி இருந்தான் தன்னை,-
தெள்-நிலவு தென்கூடல்-திரு ஆலவா அய்ச் சிவன் அடியே சிந்திக்கப் பெற்றேன், நானே.

[2]
நீர்த்திரளை நீள் சடைமேல் நிறைவித்தானை, நிலம் மருவி நீர் ஓடக் கண்டான் தன்னை,
பால்-திரளைப் பயின்று ஆட வல்லான் தன்னை,
பகைத்து எழுந்த வெங் கூற்றைப் பாய்ந்தான் தன்னை,
கால்-திரள் ஆய் மேகத்தினுள்ளே நின்று கடுங் குரல் ஆய் இடிப்பானை, கண் ஓர் நெற்றித்
தீத்திரளை, -தென்கூடல்-திரு ஆலவா அய்ச் சிவன் அடியே சிந்திக்கப் பெற்றேன், நானே.

[3]
வானம், இது, எல்லாம் உடையான் தன்னை; வரி அரவக் கச்சானை; வன்பேய் சூழக்
கானம் அதில் நடம் ஆட வல்லான் தன்னை, கடைக் கண்ணால் மங்கையையும் நோக்கா; என்மேல்
ஊனம் அது எல்லாம் ஒழித்தான் தன்னை; உணர்வு ஆகி அடியேனது உள்ளே நின்ற
தேன் அமுதை;-தென்கூடல்-திரு ஆலவா அய்ச் சிவன் அடியே சிந்திக்கப் பெற்றேன், நானே.

[4]
ஊரானை, உலகு ஏழ் ஆய் நின்றான் தன்னை,
ஒற்றை வெண் பிறையானை, உமையோடு என்றும்
பேரானை, பிறர்க்கு என்றும் அரியான் தன்னை, பிணக்காட்டில் நடம் ஆடல் பேயோடு என்றும்
ஆரானை, அமரர்களுக்கு அமுது ஈந்தானை, அருமறையால் நான்முகனும் மாலும் போற்றும்
சீரானை, -தென்கூடல்-திரு ஆலவா அய்ச் சிவன் அடியே சிந்திக்கப் பெற்றேன், நானே.

[5]
மூவனை, மூர்த்தியை, மூவா மேனி உடையானை, மூ உலகும் தானே எங்கும்
பாவனை, பாவம் அறுப்பான் தன்னை, படி எழுதல் ஆகாத மங்கையோடும்
மேவனை, விண்ணோர் நடுங்கக் கண்டு விரிகடலின் நஞ்சு உண்டு அமுதம் ஈந்த
தேவனை,-தென்கூடல்-திரு ஆலவா அய்ச் சிவன் அடியே சிந்திக்கப் பெற்றேன், நானே.

[6]
துறந்தார்க்குத் தூ நெறி ஆய் நின்றான் தன்னை, துன்பம் துடைத்து ஆள வல்லான் தன்னை,
இறந்தார்கள் என்பே அணிந்தான் தன்னை, எல்லி நடம் ஆட வல்லான் தன்னை;
மறந்தார் மதில் மூன்றும் மாய்த்தான் தன்னை, மற்று ஒரு பற்று இல்லா அடியேற்கு என்றும்
சிறந்தானை, -தென்கூடல்-திரு ஆலவா அய்ச் சிவன் அடியே சிந்திக்கப் பெற்றேன், நானே.

[7]
வாயானை, மனத்தானை, மனத்துள் நின்ற
கருத்தானை, கருத்து அறிந்து முடிப்பான் தன்னை,
தூயானை, தூ வெள்ளை ஏற்றான் தன்னை,
சுடர்த் திங்கள் சடையானை, தொடர்ந்து நின்ற என்
தாயானை, தவம் ஆய தன்மையானை, தலை ஆய தேவாதி தேவர்க்கு என்றும்
சேயானை, -தென்கூடல்-திரு ஆலவா அய்ச் சிவன் அடியே சிந்திக்கப் பெற்றேன், நானே.

[8]
பகைச் சுடர் ஆய்ப் பாவம் அறுப்பான் தன்னை, பழி இலியாய் நஞ்சம் உண்டு அமுது ஈந்தானை,
வகைச் சுடர் ஆய் வல் அசுரர் புரம் அட்டானை,
வளைவு இலியாய் எல்லார்க்கும் அருள் செய்வானை,
மிகைச் சுடரை, விண்ணவர்கள், மேல் அப்பாலை,   மேல் ஆய தேவாதிதேவர்க்கு என்றும்
திகைச் சுடரை, -தென்கூடல்-திரு ஆலவா அய்ச் சிவன் அடியே சிந்திக்கப் பெற்றேன், நானே.

[9]
மலையானை, மா மேரு மன்னினானை, வளர்புன்   சடையானை, வானோர் தங்கள்
தலையானை, என் தலையின் உச்சி என்றும்   தாபித்து இருந்தானை, தானே எங்கும்
துலை ஆக ஒருவரையும் இல்லாதானை, தோன்றாதார் மதில் மூன்றும் துவள எய்த
சிலையானை, -தென்கூடல்-திரு ஆலவா அய்ச் சிவன் அடியே சிந்திக்கப் பெற்றேன், நானே.

[10]
தூர்த்தனைத் தோள் முடிபத்து இறுத்தான் தன்னை, தொல்-நரம்பின் இன் இசை கேட்டு அருள் செய்தானை,
பார்த்தனைப் பணி கண்டு பரிந்தான் தன்னை, பரிந்து அவற்குப் பாசுபதம் ஈந்தான் தன்னை,
ஆத்தனை, அடியேனுக்கு அன்பன் தன்னை, அளவு இலாப் பல் ஊழி கண்டு நின்ற
தீர்த்தனை,-தென்கூடல்-திரு ஆலவா அய்ச் சிவன் அடியே சிந்திக்கப் பெற்றேன், நானே.

[11]
Back to Top

This page was last modified on Thu, 09 May 2024 01:33:06 -0400
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai list